Saturday, May 7, 2011


பொதுக்காரியங்களில் ஈடுபட்டு அதற்கான வலியை அனுபவிக்கும் மூத்தக்குடிமக்களின் வேதனைகளைக் கிண்டிக்கிளறி அவமானப்படுத்தும் செயல்களைச் செய்யும் இதுபோன்ற வாசகங்களால் நஞ்சாய், கிடுகிடுவென அகண்டு நீண்டுப்பரவும் அபத்தான பாதையை மேலும் ஆபத்து நிறைந்ததாக்கிக்கொள்கிறோமே அன்றி வேறொன்றுமில்லை. கெம்பேப் நிறுவனத் தொழிற்சாலியிலிருந்து கசியும் விஷ வாய்வினால் தமக்கு நோய்வருமோ உயிர் போகுமோ என்ற பயத்தில் அதை தடுக்கவேண்டுமேன போராட வந்திருந்த கூட்டத்தில் இந்த மூதாட்டியும் ஒருவர். இந்த மூத்தக்குடிமகளுக்கு உள்ள பொறுப்புணர்வை மதித்து அவரது நீதிக்காகப் போராடும் தன்மையைப் பாராட்டாமல் கேலி செய்வதால் இந்த செய்தி ஊடகத்திற்கு என்னதான் லாபமோ? லாபம் இல்லாமல் இருக்காது. ஒரு வேளை இந்த செய்தி நிறுவனம்.... பக்கம்..... இருக்கலாம்... அதனால்தான் இந்த வயது முதிர்ந்த பெரியவரை, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துப் போராடும் ஒரு இந்தியக் குடிமகளை டூருக்கு போராரு, எலக்சென் மீட்டிங்குக்குப் போராரு, கள்ளுக்கடைப் போராட்டத்துக்குப் போராருன்னு கேலி செய்யும் நிலையைச் சங்காக ஊதி, போராட்ட எண்ணத்தை வலுவிழக்கச் செய்கிறது. போராட்டத்தின் முடிவை தீர்மானித்து அதற்கேற்றார்போல் செயல்படும் இந்த மாய நீதிபதிகளினால் தர்மம் விஷமேறி செயலற்றுக்கிடக்கிறது. நம் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும் வகையில் பல செயதிகளை, கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லும் இதே நிறுவனம் இப்போ இதைப் போன்ற மதிப்பைக் குறைக்கும் கேலிகளை களைந்துவிடுமானால் ஏழைகளுக்கும் கௌரவமாக வாழ வழிகிடைக்கும். வயதானவர், எதிர்க்க முடியாதவர், படிக்காதவர், இதைப் பற்றியான எதிர்வினைப் புரியாதவர் என்பதால்தான் இந்த கிண்டலைத் தவிர்த்து அவருக்கு ஊக்கமும் உறுதியும் உடன் நிற்கிறேன் என்ற ஆதரவும் கொடுத்தால், தவறுக்கு எதிராக போராட நினைக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் பலம் வரும். இதை இந்த செய்தி நிறுவனம்கொடுக்க முடியும். கொடுத்திருக்கிறது. யாருடைய மனமும் புன்படும்படியும் செயல்படாத செய்தி ஊடகம் நம் நாட்டின் உயிர்நரம்பாக விளங்கியிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தினமலரிடமும் இதை எதிர்பார்ப்போம்.

Thursday, April 14, 2011

துரைக்கண்ணு

கல் ஒண்ணு

பார்வையாளர்கள் இல்லாத செம்மண் பூமியில் ஆளாலுக்கொரு கதையை வயலிலிருந்தும் வாய்க்காளிலிருந்தும் உத்திரத்திலேர்ந்தும் பத்திரத்திலேர்ந்தும் உருவியெடுத்தை உலர்த்தி, ஊறவைத்து அறைத்து, காயவைத்து, காயவைத்ததைப் பிரித்து பிச்சிவைத்து, அததற்கேற்ற வேடத்தைப்போட்டு விநோதக் கூத்தாடிகள் நிகழ்த்தும் நாடகத்தில் எல்லா பாத்திரங்களும் ஒருவரே, எல்லாப் பொழுதும் ஒன்றே. அந்தியில் கூடிக்கருக்கும் மனமந்தியின் நிழல், ஆர்ப்பாட்டமான இந்த நிகழோவியத்தை எல்லையில்லாத் திரையில் வெளிப்படுத்துவதை பார்வையாளனாகவோ, நடிகனாகவோ இல்லாமல் இடத்தின் சொந்தக்காரனாக பார்க்கும்போது நடிகர்களின் வெளிப்பாடு, கலையின் உச்சரிப்பென ஏற்கமறுத்து, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றும் ஏன் செய்கிறார்கள் என்றும் பின்தொடர்ந்து அவர்களது நோக்கத்தையும் போக்கையும் அச்சஉணர்வோடு அணுவணுவாக வேவுக்கண்பொருத்தி உற்றுப் பார்க்கிறேன். என் நிலத்தினை ஒட்டிச் வடக்குத் தெற்காகச் செல்லும் நீண்ட தென்னஞ்சாலையில் ஆண்டு கலைந்த உயிர் நினைவுகளெல்லாம் நெறுக்கமாக உட்கார்ந்தும் நின்றும் படுத்தும் கண்கொட்டாமல் கோடாணுகோடி அணுக்களாக இங்கே பார்ப்பதை அறியாமல், இதுவே முடிவென; இதுவே ஆரம்பமென, ஆக்கிரமிப்புப் பேராசையில் வைத்தக்கண் வாங்காமல் அந்தக் காட்சியை விழுங்கிக்கொண்டிருக்கிறேன். நிலம் காடாய் இருந்து, கழனியாய் மாறி, கரம்பாய்ப் போய், செங்கல் காலாவாகி பள்ளம்விழுந்து, புதர் அண்டிய ஒரு வீட்டுமனையாக மாறியிருக்கிற வரையில், பல்வேறு காட்டு விலங்குள், வேடர்கள், முனிவர்கள், விவசாயிகள், ஆடு மாடுகள் என் பலகோடி உயிர்கள் கோமாளிகளாக இங்கே வந்தும் போயும் இருக்கின்றன. இங்கேயே பிறந்தும் இங்கேயே இறந்துமுள்ள கணக்கும் உண்டு. அந்த உயிர்களின் நினைவுகள் தென்னஞ்சாலையில் இருந்தபடி என்னோடு போட்டி போட்டு நான் விழுங்குவதற்கு முன்பாக பார்வையால் நான் தேர்ந்தெடுத்து வைத்திருப்பவற்றில் சிறப்பானவற்றை எல்லாம் உண்டு செறித்து மிச்சத்தில் எச்சத்தை உமிழ்ந்து, வண்ணம் தடவி, சீனி பூசி எனது நாக்கையிழுத்து தடவுவதை அறியாமல் விழுங்குவதாக நினைத்து அனைத்தையும் சிதறிவிட்டு வெறுங்காற்றை உள்ளிழுத்து பேரிரைச்சலாய் ஏப்பம் விடுகிறேன், உலகையே திண்று தீர்த்துவிட்ட இறுமாப்பில். அந்த வெறுமையான ஒலியை இசையாகத் திரித்து, கூத்தாடிகள் ஆக்ரோசமாகவும் உற்சாகமாகவும் நிலத்தில் சுழன்றடித்து கிறுக்கியடிக்க மண் உடைகிறது. தவிடுபொடியாகிப் பறக்கிறது. அந்த வெளியே புழுதியில் மறையும் அளவிற்கு. என் இடத்தை காணாமல் பதறியடித்து எழுகிறேன். கதவினைத் திறந்து வாசலைத்தாண்டி வெளியேவந்து பார்க்கிறேன். புதிதாகப் போடப்பட்ட கப்பி ரோட்டில் யாருமில்லை. இல்லை எதுவும் தென்படவில்லை என்பதுதான் சரி. புழுதியில் மறைந்தக் கூத்தாடிகளில் சிலர் என்னை நெறுங்கும்போது அவர்களது மேக்அப் வாடையையும், புகையாக அவர்கள் வந்துமறையும் அசைவையும் உணர்கிறேன்.

என் நிலம்?

என் பாதத்திற்கடியில் இருக்கும் இடம்தான், என் நிலமா? இதுவரை செருப்புக்காலோடுதான் இறங்கியிருக்கிறேன். ஒருமுறைகூட வாசலைவிட்டு வெறுங்காலோடு நிலத்தில் நடந்ததில்லை. நிலத்திற்கும் எனக்கும் ரத்தச் சொந்தம் இல்லை. செருப்பு மட்டும் நிலத்தை உரசிஉரசி அனுபவிக்கிறது. பிறகு தேய்ந்து போக, புதிய செருப்பு உரசலைத் தொடர்கிறது. பழைய கதைகள் ஞாபகப்பதிவில் இல்லாமல்.

அப்படியானால் “எனது நிலம்” என்று கொக்கரிப்பதை இனி செய்யப்போவதில்லை. இப்போது என்னோடு வாழும், எனக்கப்புறம் வரும் கூத்தாடிகள் அனைவரும் இதை மேடையாகப் பயன்படுத்திக்கொள்ளட்டும். எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளட்டும். அவர்களின் கலை வெளிப்பாட்டைக் கண்டு ரசித்து என் வாழ்க்கையை அனுபவிக்கப் போகிறேன். இந்த வாழ்க்கையில் இதைவிடுத்து வேறெதும் இன்பம் தர வல்லதல்ல. இருக்கும் வரையில்தான் இன்பம். அதாவது இருப்பது இன்பம். இங்கே இப்போது இருக்கிறேன். அது இன்பம். முன்பு அங்கு இருந்தேன். அது அப்போதைய இன்பம். அதனால் அதனால் என் முகத்தில் கோமாளியின் வண்ணத்தை ஏற்று, இங்கே இருக்கும் காலம்வரை தக்க வைத்துக்கொள்ளப் போகிறேன். அதனால், மக்களே.... ஓடிவாருங்கள். நானும் ஒரு கதை வைத்திருக்கிறென். நிகழ்த்திக் காண்பிக்கிறேன், வாருங்கள். அந்தக் கதையின் நாயகன் நான். என்னைப் பற்றி சொல்லும் போது எனது சுய புராணத்தின் கதாநாயகன் நானே. வாருங்கள். என்னை வைத்து யாரும் கதையெழுதாத போது நானே என்னைப் பற்றி எழுதிக்கொள்கிறேன். எழுதியதை வாசிக்கிறேன். வாருங்கள். சுற்றி அமருங்கள். கூத்து ஆரம்பிக்கப்போகிறது, தத்தோம் தத்தோம் தத்தித்தோம் தோம் தோம் தோம் னக்கடித் தோம்.தோம்.

திரைவிலகுகிறது. மூடியகண்கள் திறக்கிறது. எதிரே நான். என்னை நானே பார்க்கிறேன். அழகான மேக்அப். கோமாளி போல. மிக அழகாக. என்னை எனக்குப் பிடிக்கிறது. இதுவரையில் பிடிக்காதது, இப்போது பிடிக்கிறது.

புழுதியொடு புழுதியாகக் கடந்து போகும் ஒரு கோமாளியின் முதுகில் தொத்திக்கொண்டேன். பதறியடித்து ஓடுகிறான். ஓ...ஓ...ஓவென அவன் ஓட்டத்திற்கேற்றவாறு நானும் அலறினேன். ஆங்காங்கே நடித்துக்கொண்டிருந்த கோமாளிகளும் என்னைப் பின்தொடர்ந்தனர். பல பெட்டிகள் கொண்ட ஒரு நீண்ட ரயில்போல நாங்கள் ஓ....ஓவென அலறிக்கொண்டே ஓடினோம். சப்தமும் ஓட்டமும் இணையும் ஒரு புள்ளியில் எல்லோரும் தொலைந்தோம். நிலம் தனிமைப்பட்டது. நான் அந்த இடத்தைவிட நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சாரம் என்ற ஊரில், ராசய்யர் தோட்டம் வீதியில், ஆறாம் எண் வீட்டில் மூவாயிரம் ரூபாய் வாடகைக்கு கற்பகத்தோடும் அரி மற்றும் தான்யாவோடும் வசிக்கலானேன், கணேசன் என்ற பெயர்கொண்டு, விரைவில் அந்த மனையில் வீட்டைக் கட்டிவிடவேண்டும் என்ற கனவோடு.

மனை தனிமையில் இருந்தது, என்றாவது கணேசன் இங்கே வீட்டைக் கட்டுவான் என்ற கனவோடு. ஆனால் தன்னோடு தொடர்பு கொண்டிருந்த அனைத்த சம்பவங்களையும் அசைபோடுகிறது என்பதை என்னால் உணர முடிகிறது. இதுகாலமும் அந்த நிலம் மட்டும்தான் நிரந்தமாக இருந்திருக்கிறது என்ற செய்தியை இனிவரும் பயனாளிகள் உணர பதிவு செய்யவேண்டும் என்ற நினைப்பில் இந்த புதினத்தின் முதல் நுனியை யார் வேண்டுமானாலும் பிடிக்கட்டும் என இழுத்து நீட்டி வைக்கிறேன்.

முதலில் அதனைப் பிடித்து தன் வாழ்க்கையை எழுதத் தொடங்குகிறான், துரைக்கண்ணு.